தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs part 1

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? 

பொருள்: கடுகு எத்தனைதான் சிறியதாக இருப்பினும் அதன் காரம் போகாது அதன் பலனைத்தரும். அதே போலவே பலரையும், சில பொருட்களையும் சிறியவை என எண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் அதனால் பல நேரத்திற்கும் மிகுந்த பலன் கிடைக்கும்.

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

பொருள்: ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது மிகத்துயரத்தை கொடுத்துவிடும்.

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.

பொருள்: பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு இழைக்கும் போது அவரால் எதிர்க்க முடியாமல் இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும்.

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

பொருள்: வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்திருப்பதை 'வைக்கோல் போர்' என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றிவிடும். தீயை அணைப்பதாக இருந்தால் அதை கடுகளவும் (எள்ளளவும்) மிச்சம் வைக்காமல் அணைத்துவிட வேண்டும்.

ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

பொருள்: பண்டைய காலத்தில் படித்த அறிஞர்கள் கலந்து உரையாடி விவாதிக்கும் இடத்திற்கு அம்பலம் என்று பெயர். அங்கே இன்று எவ்வாறு பணம் உள்ளவர்களை மதிக்கிறார்களோ அதே போல முன்பும் பணம் உள்ளவர்களின் பேச்சு சிலரால் மதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வகை பழமொழி ஏற்பட்டது.

சருகைக் கண்டு தணலஞ்சுமா.

பொருள்: உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ, உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே அதைக்கண்டு அஞ்சுவதில்லை. இதையே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான். இவ்வகை சூழ்நிலைகளை விளக்க இப்பழமொழி கையாளப்படுகிறது.

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், 
இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.

பொருள்: இப்பழமொழி மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது. கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிழக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

பந்திக்கு முந்து, படைக்கு பிந்து.

பொருள்: சாப்பிடுவதற்க்கு நம் கை (வலது கை) முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்) இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும். இதுவே பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்று பழமொழியின் அர்த்தம்.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

பொருள்: பேறு பார்க்கும் மருத்துவ மகளிருக்கு (மருத்துவச்சி) கண்டிப்பாக கூலி கொடுக்க வேண்டும். பிள்ளை ஒருவேளை இறந்தே பிறந்தாலும் பேரு பார்த்ததற்கான கூலி கொடுத்தாக வேண்டும்.

Comments